Take a fresh look at your lifestyle.

‘பிஸ்தா’ – திரைப்பட விமர்சனம்!

204

சென்னை:

ஓரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் நடக்கும் திருமணங்களை தன் நண்பர்களுடன் இணைந்து தடுத்து நிறுத்துவதையே தொழிலாக செய்யும் நாயகன் சிரிஷ்.  தனது நண்பர்கள் மூலமாக அந்தப் பெண்ணை கடத்தி அவர் காதலிக்கும் காதலனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் சிரிஷ் மீது பலர் கோபத்துடன் இருக்கின்றனர்.  இந்த சூழ்நிலையில்தான் மிருதுளா முரளி மீது சிரிஷுக்கு காதல் வர,   மிருதுளா முரளியும்  சிரிஷை மனதார காதலிக்கிறார்.  அப்போது காதலி மிருதுளா முரளி மணப்பெண்களை கடத்தும்  தொழிலை கைவிட வேண்டும் என்று  நிபந்தனை விதிக்கிறார்.

தன் காதலி சில நிபந்தனைகளை விதிக்கும் போது முதலில் மறுக்கிறார் சிரிஷ்.  அதன் பிறகு தன் காதலிக்காக நான் இனி எந்த பெண்ணையும் கடத்த  மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார்.  இந்த சூழ்நிலையில் மிருதுளா முரளியிடம் கொடுத்த  சத்தியத்தை மீறுகிறார் சிரிஷ். இதனால் கோபம் கொண்ட  மிருதுளா முரளி,  சிரிஷிடம்   என்னிடம் சத்தியம் செய்து விட்டு அதை மீறியதால்  நம் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடு’ என்று கோபத்துடன் சென்று விடுகிறார். எவ்வளவு முயன்றும் தன் காதலி மிருதுளா முரளியை சமாதானம் செய்ய முடியவில்லை.ஆனால் சிரிஷிற்கு  6 மாதத்திற்குள் கட்டாயம் திருமணம் நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  இதனால், அவரது பெற்றோர்கள்  சிரிஷிற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். அனால் அவரை திருமணம் செய்ய எந்த பெண்ணும்  முன் வரவில்லை. காதலியும் கைவிட்டுவிட்டுப் போன நிலையில் அவருக்குத் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ‘பிஸ்தா’.

சாந்தமான அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு கல்யாண வீடுகளில் சிரிஷ் செய்யும் அட்டகாசங்கள் அதிர வைக்கிறது. ஹீரோயின்  மிருதுளா முரளியை பார்த்ததும் காதல் கொண்டு அவர் பின்னாள் சுற்றுவதும், தனது வேலையால் காதலுக்கு எதிராக உருவெடுக்கும் சிக்கல்களை சமாளிக்கும் காட்சிகளிலும் நடிப்பில் அசத்துகிறார். இப்படம் முழுவதும் ஜாலியான இளைஞராக வலம் வரும் சிரிஷ், தனது திருமண விஷயத்தில் எடுக்கும் இறுதி முடிவு இளம் வாலிபர்களுக்கு நல்ல அறிவுரையாக இருப்பதோடு, படத்தின் கதைக்கும் பலம் சேர்க்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் மிருதுளா முரளி, பாடல் காட்சிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.கதாநாயகியின் அக்கா என்று நடித்திருக்கும் அருந்ததி நாயர், கதாநாயகிக்கு அவ்வபோது  அறிவுரை சொல்லும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். இறுதியில், அவர் எடுத்த முடிவை அனைவரும் பாராட்டுகின்ற அளவிற்கு சிறப்புடன் நடித்து இருக்கிறார்.

சதீஷ், யோகிபாபு, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோரைச் சிரிக்க வைப்பதற்கென நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரவரும் தங்கள் பங்கை நிறைவேற்றி படத்தின் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்களுக்குக் கதைக்களமே வாய்ப்பு கொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு செந்தில் திருமணத்திற்க்கு  மொய் பணம் கொடுக்கும் காட்சியில் நடித்திருந்தாலும் அவரை இன்னும் அதிகமான காட்சிகளில் பயன்படுத்தி  இருக்கலாம்.

தரண்குமாரின் இசையில்  பாடல்கள் கேட்கும்விதமாக அமைந்திருக்கிறது. கதைக்களத்துக்கேற்ற பின்னணி இசையைக் கொடுத்து இயக்குநரின் எண்ணங்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார் தரண்குமார்.எம்.விஜய்யின் ஒளிப்பதிவில் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மிகச் சிறப்பாக  காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

திருமணங்களைத் தடுத்து நிறுத்துவது என்கிற புதிய தொழிலை அறிமுகப்படுத்தி அதன்மூலம் காமெடியாக திரைக்கதையை நகர்த்தியிருக்கும் இயக்குநர் ரமேஷ்பாரதி..  இறுதியில் எதிர்பார்க்காத முடிவு ஒன்றை வைத்து படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு, அனைவரின் கைதட்டலையும்  பெறுகிறார்.

மொத்தத்தில் அனைத்து ரசிகர்களும்  பார்க்க வேண்டிய படம் ‘பிஸ்தா’

திரைநீதி செல்வம்.

 

 

.